சென்னை,
சென்னையின் நான்காவது ரயில் முனையமாக பெரம்பூரை மேம்படுத்தும் திட்டத்தின் முன்னோட்டமாக, வில்லிவாக்கம் – அம்பத்தூர் இடையே ரூ.1,546.69 கோடி மதிப்பில் 5-வது மற்றும் 6-வது புதிய ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்துக்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது. இந்தப் பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னைக்கு வந்து செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை, எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் பயணிகள் நெரிசல் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பெரம்பூர் ரெயில் நிலையம், 360 கோடி ரூபாயில் நான்காவது முனையமாக மாற்றப்படும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வில்லிவாக்கம் – அம்பத்தூர் இடையே 6 கி.மீ. தூரத்துக்கு, 5-வது, 6-வது புதிய ரெயில் பாதைகள் அமைப்பதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்ள, ரூ.1,546.69 கோடி ரூபாய்க்கு தெற்கு ரெயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது.இந்த வழித்தடத்தில் பெரம்பூர் வழியாக ரெயில்கள் இயக்கப்படுவதால், 360 கோடி ரூபாயில் நான்காவது புதிய முனையம் அமைப்பதற்கான பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், ரெயில் நிலையத்தின் கூடுதல் வசதிகளுக்கான அமைப்புகள், பார்சல் அலுவலகங்கள், வாகன நிறுத்தம், வணிக வளாக பகுதிகள், சுற்றுச்சூழல் மேம்படுத்தும் நவீன வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இரண்டு ஆண்டுகளில் இந்த பணிகளை முடிவுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இதற்கான நிலம் கையகப்படுத்துதல், ரயில் பாதைகள், சிக்னல் உள்ளிட்ட பாதுகாப்பான இயக்கத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும். வரும் 2028-ல் இந்த புதிய முனையத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதனால் ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்படுவதை தவிர்ப்பதோடு கூடுதல் ரெயில்களை இயக்க முடியும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்து தேவைக்கு ஏற்பட கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.