தமிழக செய்திகள்

சரக்கு வாகன சோதனைக்கு புதிய கட்டுப்பாடு: வணிகவரி ஆணையர் சுற்றறிக்கை

இதுவரை செயல்பட்டு வந்த 'திரியும் படை' கலைக்கப்பட்டு. இனி 'பறக்கும் படை' என்ற பெயரில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சரியான காரணங்கள் இன்றி சரக்கு வாகனங்களை இடைமறித்து சோதனை செய்ய கூடாது என வணிகவரி ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கை

இந்தியாவில் சரக்கு வாகன டிரைவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினை, வழியெங்கும் நடைபெறும் வாகன சோதனைகள்தான். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விசாரிக்கப்படும்போது டிரைவர்களும், வணிகர்களும் கடும் மனஉளைச்சலுக்கும், தர்மசங்கடத்திற்கும் ஆளாகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சென்னை வணிகவரி ஆணையர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

பறக்கும் படை

அதன்படி, சாலையில் செல்லும் சரக்கு வாகனங்களை இனி அவ்வப்போது நிறுத்தி சோதனை செய்யும் வழக்கம் முற்றிலும் முடிவுக்கு வருகிறது. இதுவரை செயல்பட்டு வந்த 'திரியும் படை' கலைக்கப்பட்டு. இனி 'பறக்கும் படை' என்ற பெயரில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான காரணங்கள்...

இந்த புதிய உத்தரவின்படி, 'பறக்கும் படை' அலுவலர்கள் இனி தெருக்களில் சுற்றித்திரிந்து வாகனங்களை நிறுத்த முடியாது. வணிகவரி இணை ஆணையர் அலுவலகத்தில் மட்டுமே அவர்கள் இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட வாகனத்தில் ஜி.எஸ்.டி. விதிகளுக்கு மாறாக சரக்குகள் கொண்டு செல்லப்படுவதாக துறைக்கு உறுதியான உளவுத்தகவல் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) (ஜி)-ன் படி, நாட்டின் எந்த பகுதியிலும் சட்ட பூர்வமாக வணிகம் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உண்டு. தகுந்த ஆதாரமின்றி வாகனங்களை தடுத்து நிறுத்துவது இந்த உரிமைக்கு எதிரானது. கடந்த 8-ந் தேதியன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், கவுன்சிலின் முறையான அறிவுறுத்தல் வரும் முன்பாகவே, தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இந்த புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி அமலுக்கு வந்துள்ள இந்த அதிரடி உத்தரவால், மாநிலம் முழுவதும் உள்ள வணிகர்களும், லாரி உரிமையாளர்களும், டிரைவர்களும் பெருத்த நிம்மதி அடைந்துள்ளனர். தமிழக அரசின் இந்த ஆரோக்கியமான நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேற்கண்ட தகவலை ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT