தமிழக செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுரஅடி பரப்பளவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, அப்பகுதி மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த சூழ்நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடித்து அகற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்தக் கட் டிடங்களை இடிக்கும் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவில்லை என்பதற்கான அறிகுறியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற இருந்த பேச்சு வார்த்தைக்கு எழுத்துப்பூர்வமான அழைப்பு வரவில்லை என மயிலை அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சடை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT