சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
செ.வெ.எண்.169 நாள் : 27.05.2026 திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள் 2026ன்படி, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
இந்திய அரசு 28.01.2026 அன்று திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 குறித்த அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கண்ட விதிகள் 01.04.2026 முதல் அமலுக்கு வரப்பெற்றுள்ளது.
திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள், 2026ன்படி, கீழ்காணும் அளவு கோள்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள்/ நிலையங்கள் “பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள்” ஆக வகைப்படுத்தப்படுகின்றன
* 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த தள பரப்பளவு கொண்ட கட்டடம்;அல்லது • தினசரி 40,000 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் பயன்பாடு; அல்லது • தினசரி 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவு உற்பத்தி செய்பவர்கள்
மேற்கண்ட வரையறை, நிறுவன பயனாளர்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள்/சொசைட்டிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐ.டி. பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களையும் உள்ளடக்கும். திடக்கழிவுகள் மேலாண்மை 2026 விதிமுறைகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி வரம்பிற்குள் உள்ள அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கும் கீழ்கண்டவை அறிவிக்கப்படுகின்றன:
1. கட்டாயப் பதிவு: பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
2. காலக்கெடு: அனைத்து தகுதியுடைய பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களும், சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்களிடமிருந்து கடிதம் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணைய தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
3. பின்பற்றாதவர்களுக்கு நடவடிக்கை: குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யாதவர்களுக்கு திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள், 2026ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் பின்வருவனவற்றை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்:
· பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தேவையான குப்பைத் தொட்டிகளை கொள்முதல் செய்து, கழிவுகளை தரம் பிரித்து, பெருநகர சென்னை மாநகராட்சி அல்லது பெருநகர சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
· பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தாங்கள் உண்டாக்கும் உயிரியல் கழிவுகளை தங்கள் வளாகத்திலேயே உரமாக்கல் / உயிரி எரிவாயு ஆக்குதல் போன்ற முறைகளில் செயல்படுத்த வேண்டும்.
· திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி வருடாந்திர அறிக்கையை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
· உலர்கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு பராமரிப்பு கழிவுகளை உள்ளூர் நிர்வாக அமைப்பு அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட முகமைக்கு ஒப்படைக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்.
· பதிவிற்காக தனிப்பட்ட இணைப்பு, பெருநகர சென்னை மாநகராட்சியின் https://gccservices.in/bulkwaste/register என்ற இணையதளத்தில் உள்ளது. மண்டல அலுவலர்கள் (மண்டலம் 1 முதல் 15 வரை) நியமிக்கப்பட்ட பணியாளர்கள்/தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள்பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குவார்கள்.
· சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான கழிவு மேலாண்மையை உறுதி செய்ய, அனைத்து நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
· இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.