சென்னை,
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய், எரிசக்தித் துறை சார்பில் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்துவரும் மின் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகத் துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மின்கட்டமைப்பு அவசியமாகிறது.
மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற முக்கிய மின் நுகர்வு மையங்களுக்குத் திறம்படக் கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. இதற்காக, அரசு தொலைநோக்குடன் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” (Tamil Nadu Transmission Improvement Scheme) செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையத்தில் தற்போது தலா 210 மெகாவாட் திறன்கொண்ட ஐந்து நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன் 1,050 மெகாவாட் ஆகும். இந்த அலகுகள் 1979-ம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்குப் பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க, தற்போதுள்ள அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஐந்து, 210 மெகாவாட் அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைத்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில், தலா 800 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அலகுகளுடன், மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு New Supercritical Thermal Power Station 20 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
சென்னை மாநகரின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய வலுவான மின் பகிர்மானக் கட்டமைப்பு அவசியமாகும். சென்னையில் பருவ மழைக்காலங்களில் வெள்ளம் தொடர்பாக ஏற்படும் மின்தடைகளையும், கோடைக்காலங்களில் அதிக மின் தேவை காரணமாக ஏற்படும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, 36 புதிய 33 By 11 (33/11) கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், Pillar Box, Circuit Breakers உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் 1,762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் செமிகண்டெக்டர் துறையில் (Semiconductor Sector) அதிக அளவு முதலீட்டினை ஈர்க்கவும், இத்துறையில் நமது மாநிலத்தின் பங்கினை கணிசமான அளவு உயர்த்திடவும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா (Semiconductor & Electronics Manufacturing Park) 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
இப்பூங்காவில், Semiconductor துறையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, R&D – Research and Development வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
நிதித் தொழில்நுட்ப (FinTech) புதுமைகளுடன் டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (Coimbatore FinTech Hub) பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும். இதன்மூலம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், நிதி மற்றும் நிதிநுட்பத் துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
2026-27ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் (Multi Model Logistics Parks), உலர் துறைமுகங்கள் (Dry Ports) அமைத்து முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மாவட்டப் பகுதிகளில் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார்செய்து அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் “பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் (Multi Model Logistics Hub)” ஒன்று அமைக்கப்படும்.