கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

திருச்சி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு: 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக டாங்கர் பிரவீன் உமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

கூடுதல் தலைமை செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:-

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.ஜி. பி.கே.செந்தில் குமாரி, சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சென்னை மேற்கு மண்டல விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு எஸ்.பி. டாங்கர் பிரவீன் உமேஷ், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு எஸ்.பி.-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் எஸ்.அசோக்குமார், தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப்-டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்ட் அக்‌ஷய் அனில் வகாரே, பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சப்-டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்ட் வி.லலித்குமார், பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.