தமிழக செய்திகள்

தூத்துக்குடி-சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை: அதிகாரியிடம் பயணிகள் நல சங்கம் மனு

மதுரை- லோக்மான்ய திலக் இடையிலான மதுரை வாராந்திர விரைவு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில்வே அதிகாரியிடம் பயணிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி-சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரெயில் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ரெயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் தெற்கு ரெயில்வேயின் மதுரை கோட்ட அலுவலகத்தில், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் வி.பிரசன்னாவை நேரில் சந்தித்து, தூத்துக்குடி மக்களின் நீண்டகால ரெயில்வே கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடியில் இருந்து காலையில் மதுரை அல்லது திருச்சி அல்லது போடிநாயக்கனூருக்கு நேரடி ரெயில் இயக்கப்பட வேண்டும். அப்படி இயக்கப்படும்போது, தூத்துக்குடியிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி ரெயிலை ரத்து செய்ய வேண்டும்.

மேட்டுப்பாளையம் ரெயில் தினசரி ரெயிலாக மாற்றம்: (வண்டி எண்: 16765-16766) தூத்துக்குடி- மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி வாராந்திர இருமுறை ரெயிலை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும். அவ்வாறு இயக்கப்படும் போது, தூத்துக்குடியிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி ரெயிலை ரத்து செய்யலாம்.

வந்தே பாரத் ரெயில் சேவை:

தூத்துக்குடி- சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட வேண்டும்.

பாலக்காடு ரெயிலில் குளிர்சாதனப் பெட்டிகள் இணைத்தல்: (வண்டி எண்: 16791/16792) தூத்துக்குடி- பாலக்காடு- தூத்துக்குடி விரைவு ரெயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (2 Tier AC) ஒன்றும், மூன்று அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (3 Tier AC) ஒன்றும் கூடுதலாக இணைக்கப்பட வேண்டும்.

முத்து நகர் அதிவிரைவு ரெயிலில் கூடுதல் பெட்டி: (வண்டி எண்: 12693-12694) தூத்துக்குடி- சென்னை- தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு ரெயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி (Sleeper Class) அல்லது மூன்று அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (3 Tier AC) ஒன்றை நிரந்தரமாக இணைக்க வேண்டும்.

மதுரை- சென்னை ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு: (வண்டி எண்: 22623-22624) மதுரை- சென்னை வாரமிருமுறை ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை தினசரி ரெயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நீட்டிப்பு: (வண்டி எண்: 22101/22102) மதுரை- லோக்மான்ய திலக் (மும்பை)- மதுரை வாராந்திர விரைவு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

மைசூர் ரெயில் வருகை நேரம் மாற்றம்: (வண்டி எண்: 16236) மைசூர்- தூத்துக்குடி விரைவு ரெயில், தூத்துக்குடிக்கு காலை 9.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அதன் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

நெல்லை- கன்னியாகுமரி ரெயில் நீட்டிப்பு: (வண்டி எண்: 56707-56708) திருநெல்வேலி- கன்னியாகுமரி- திருநெல்வேலி ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் மா.பிரமநாயகம், துணைத் தலைவர் எஸ்.அந்தோணி முத்துராஜா நிர்வாகச் செயலாளர் ஜே.ஏ.என்.ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்ட ரெயில் பயணிகளின் தேவைகளை விவரித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கூடுதல் கோட்ட மேலாளர் வி.பிரசன்னா, கோரிக்கைகளை விரைவாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.