சென்னை,
தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் அடங்குவார்கள். இவர்களில், இடம்பெயர்ந்தோர் மட்டுமே மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த அவகாசம் இன்று (30-ந் தேதி) நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் 16 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். தற்போது, மேலும் இந்த கால அளவை 10 நாட்கள் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வரை விண்ணப்பித்தவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக வாக்காளர் அடையாள அட்டை எண் ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, 15 நாட்களுக்குள் அனைவருக்கும் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.