நீர்வீழ்ச்சிகள் 
தமிழக செய்திகள்

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பகுதிகளில் தொடர் மழையால் புதிய நீர்வீழ்ச்சிகள்

நீர்வீழ்ச்சிகளின் பின்னணியில் பயணிகள் தங்களது மொபைல் போன்களில் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

வெலிங்டன்,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தத் தீவிர மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொடர் மழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பகுதிகளில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி கண்கொள்ளா காட்சியாக உருவெடுத்துள்ளன.

குடிநீர் தட்டுப்பாடு

நீலகிரி மாவட்டத்தில் நிலவிய வறட்சியான சூழலால், முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது. இதற்கு எல்நினோ தாக்கமே காரணம் என இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

புத்துயிர் பெற்ற அருவிகள்

இந்நிலையில், கடந்த வாரம் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததோடு, ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதீத நீர்வரத்தால், மலைப்பகுதிகளில் நீண்ட நாட்களாக வறண்டிருந்த அருவிகள் அனைத்தும் தற்போது புத்துயிர் பெற்றுள்ளன.

புதிய நீர்வீழ்ச்சிகள்

குறிப்பாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை அருகில் உள்ள புகழ்பெற்ற லாஸ் நீர்வீழ்ச்சி, மரப்பாலம் மற்றும் குரும்பாடி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதுமட்டுமன்றி, மலை முகடுகளின் பல இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகளும் தோன்றி ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

சுற்றுலா பயணிகள் ஆர்வம்

மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும், அந்த வழியாக பயணித்த சுற்றுலா பயணிகள் இந்த இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை கண்டு வியந்தனர். காரை நிறுத்தி, கொட்டும் நீர்வீழ்ச்சிகளின் பின்னணியில் தங்களது மொபைல் போன்களில் ஆர்வத்துடன் புகைப்படங்கள் மற்றும் செல்பிக்களை எடுத்து மகிழ்ந்தனர். இந்த புதிய நீர்வீழ்ச்சிகளின் தோற்றம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT