தமிழக செய்திகள்

தாலி கட்டிய கையோடு ஜனநாயக கடமையாற்றிய புதுமணத் தம்பதி

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் பெண்கள், இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கிறார்கள்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து களம் கண்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தலில் வாக்களிப்பதற்காக பல்வேறு வாக்குச்சாவடிகளில் காலை 6 மணியிலிருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து இருந்தனர். 7 மணிக்கு பிறகு இளம் பெண்களும், வாலிபர்களும் மிகுந்த ஆர்வத்துடன் திரண்டு வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டு போடுவதற்கு காலையிலேயே ஆர்வம் காட்டியதை காண முடிந்தது. சட்டமன்ற தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில், 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றவர்களாவர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் பெண்கள், இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டு வருவதால் வாக்குசதவீதமும் மிகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவுக்கு இடையே சில சுவாரசிய சம்பவங்களும் நடைபெற்றன. அந்த வகையில், திருவள்ளூரில் புதுமண தம்பதி ஒன்று மாலையும் கழுத்துமாக வாக்களிக்க வந்தது கவனம் பெற்றது. வடபழனியில் திருமணம் முடிந்ததாகவும், வீட்டிற்கு செல்லும் வழியில் நேராக வந்து வாக்களித்ததாகவும் புதுமண தம்பதி கூறினர்.