விருதுநகர்,
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்தது தொடர்பான தகராறில் மாமியாரை அவரது வீட்டில் புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த மைத்துனருக்கும் சரமாரி கத்திக் குத்து விழுந்தது.
விருதுநகர் அருகே பாலையம்பட்டியை சேர்ந்த அதிராமிளகி என்பவருடைய மகன் சிவா (வயது 26). இவர், சூலக்கரை பகுதியில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் செவல்பட்டியை சேர்ந்த வாசகதேவி (27) என்பவரும் வேலைபார்த்தார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு சிவா கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வேலையில்லாத நாட்களில் மது குடித்து விட்டு வந்து வாசகதேவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வாசகதேவி கணவரை பிரிந்து செவல்பட்டியில் உள்ள தாய் சாந்தியின் (55) வீட்டிற்கு சென்றுவிட்டார்.
புதுமாப்பிள்ளை சிவாவுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் செவல்பட்டியில் மாமியார் வீட்டுக்கு சிவா சென்றார். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும் வாசகதேவியிடம் விவாகரத்து வழக்கை திரும்ப பெற்று மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, மனைவியை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு இழுத்துச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதை மாமியார் சாந்தி, வாசகதேவியின் சகோதரர் சாமிமுருகன் (33) ஆகியோர் தடுத்துள்ளனர்.
இதில் ஆத்திரம் அடைந்த சிவா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார், மைத்துனரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாமி முருகன் பலத்த காயம் அடைந்தார்.
இதற்கிடையே இவர்களது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். சாமி முருகன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் .
கொலை செய்துவிட்டு செவல்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த சிவாவை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.