தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 82 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. மொத்தம் 21 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். தேனி தாலுகாவில் 43 தேர்வு மையங்களில் 11,610 பேரும், பெரியகுளம் தாலுகாவில் 14 தேர்வு மையங்களில் 3,799 பேரும், உத்தமபாளையம் தாலுகாவில் 25 தேர்வு மையங்களில் 6,179 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த தேர்வுக்காக 164 கள ஆய்வு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 13 பறக்கும் படைகள், 19 இயக்கக் குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேர்வு நடைமுறைகளை வீடியோ பதிவு செய்ய தலா ஒரு ஒளிப்பதிவாளர் வீதம் 82 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள்கள் எடுத்து வரவும், தேர்வு முடிந்தவுடன் பலத்த பாதுகாப்புடன் விடைத்தாளை எடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.