தமிழக செய்திகள்

வயநாடு வனப்பகுதியில் தென்பட்ட நீலகிரி ‘கரும்வெருகு’ - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கரும்வெருகு அழிந்துவரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக நீலகிரி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே காணப்படும் அரியவகை விலங்கான நீலகிரி 'கரும்வெருகு' (நீலகிரி மார்டன்). இது கீரியைப் போன்ற தோற்றத்துடன் நீண்ட வால் மற்றும் பழுப்பு நிற உடலையும். கழுத்துப் பகுதியில் மஞ்சள் நிறத்தையும் கொண்டது.

பகலில் மரங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் இது, சிறு பூச்சிகள், பறவைகள் மற்றும் பழங்களை உண்ணும் அனைத்துண்ணியாகும். உலகளவில் இதன் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளதால், இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட அழிந்துவரும் இனமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே பதிவாகி இருந்த இந்த விலங்கு, தற்போது கேரளாவின் வயநாடு வனப்பகுதியிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரும்வெருகு இன்னும் உயிர்ப்புடன் இருப்பது உறுதியாகியுள்ளதால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காட்டின் சமநிலையைப் பேண உதவும் இந்த அரிய விலங்கைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT