தமிழக செய்திகள்

தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை உயர்வு: அரசு தகவல்

நீலகிரி வரையாடு இனத்தில் 44.87 சதவீதம் ஆனைமலைப் பகுதியில் காணப்படுகின்றன.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீலகிரி வரையாடு எண்ணிக்கையினை மதிப்பிடும் நோக்கில், கேரள வனத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் “நீலகிரி வரையாடு திட்டத்தின்” முக்கிய அங்கமாக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மாநில விலங்கான “நீலகிரி வரையாடு” குறித்த முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 29 ஏப்ரல் 2024 முதல் 1 மே 2024 வரை 140 பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,031 என மதிப்பிடப்பட்டது. இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 24 ஏப்ரல் 2025 முதல் 27 ஏப்ரல் 2025 வரை 177 பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், தமிழ்நாட்டில் மொத்த நீலகிரி வரையாடு எண்ணிக்கை 1,303 என மதிப்பிடப்பட்டது.

மாநில விலங்கான நீலகிரி வரையாட்டின் மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, தமிழ்நாடு வனத்துறையால் 24 ஏப்ரல் 2026 முதல் 27 ஏப்ரல் 2026 வரை நான்கு நாட்கள், நீலகிரி வரையாடு காணப்படும் 14 வனக் கோட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடைபெற்ற அதே 43 வனச்சரகங்களுக்குட்பட்ட 126 வன சுற்றுப் பாதையில் அமைந்த 177 கணக்கெடுப்பு நில அளவை தொகுதிகளிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,364 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 4.68 சதவீதம் அதிகரிப்பை காட்டுகிறது. தமிழ்நாட்டிலுள்ள மொத்த நீலகிரி வரையாடு இனத்தில் 44.87 சதவீதம் ஆனைமலைப் பகுதியில் காணப்படுகின்றன; அதேசமயம் நீலகிரி நிலப்பரப்பு 29.25 சதவீதம் நீலகிரி வரையாடு இனத்தைக் கொண்டுள்ளது. கணக்கீட்டில் ஆண்-பெண் விகிதம் 55:100 எனவும், பெண்-குட்டி விகிதம் 100:66 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

நீலகிரி வரையாட்டின் சூழலியல் நிலையைப் புரிந்துகொள்வதற்கும், அதன் வாழ்விட மேலாண்மையை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நீண்டகால பாதுகாப்புத் திட்டமிடலுக்குமான தரவுத்தளத்தின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, நீலகிரி வரையாடு தொடர்பான மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையினை வனத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.