தமிழக செய்திகள்

நீலகிரி: காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்கச் சென்ற வனத்துறையினர் மீது தாக்குதல்

பொதுமக்கள் திடீரென வனத்துறையினர் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்கச் சென்ற வனத்துறையினர் மீது பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் 7 ஊழியர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அந்த பகுதியில் இருந்த ஒருவரைத் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வனத்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்க முயன்றனர். அப்போது, யானை ஊடுருவலைத் தடுக்க வனத்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள், வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் திடீரென வனத்துறையினர் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பாக வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், வனத்துறை ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் அரசு வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.