தமிழக செய்திகள்

நீலகிரி: அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலித்து திருமணம் செய்த தங்களை பெற்றோர் பிரித்து விட்டதாக விரக்தி அடைந்த பிரசாந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஊட்டி,

பெற்றோர் பிரித்ததால் விரக்தி அடைந்த, அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 26). இவர் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் பந்தலூர் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று அவரது தாய் செல்போனில் அழைத்தும், அதை பிரசாந்த் ஏற்கவில்லை. இதுகுறித்து அவர் நகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தார். அவர்கள் விடுதி அறையில் சென்று பார்த்த போது, பிரசாந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவல் அறிந்த தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரசாந்த், காந்தல் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோவிலில் வைத்து சூர்யாவை பிரசாந்த் திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த இருவீட்டின் பெற்றோர் பிரசாந்துக்கு அண்ணன், சூர்யாவுக்கு அக்காள் உள்ளனர். அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து விட்டு, சூர்யா, பிரசாந்துக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் சூர்யா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். காதலித்து திருமணம் செய்த தங்களை பெற்றோர் பிரித்து விட்டதாக விரக்தி அடைந்த பிரசாந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர் சூர்யா தனது வீட்டில் வைத்து நேற்று கை நரம்பை அறுத்தும், விஷம் குடித்தும் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.