தமிழக செய்திகள்

நீலகிரி: தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

யானையை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலை, சந்த குன்னு, முக்கட்டி, சோலாடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கூடலூரில் இருந்து நெலாக்கோட்டை, பிதிர்காடு, பாட்டவயல் வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்தும் வருகின்றன. இரவில் ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு பிதிர்காடு அருகே சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்தன. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. தகவல் அறிந்த கூடலூர் வன அலுவலர் தேவராஜ், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. அந்த யானையை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.