தமிழக செய்திகள்

நிர்மலா சீதாராமன் குட்டு அம்பலம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

கடந்த பிப்ரவரி மாதம், பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதமே சாட்சி என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையின் போது தெரிவித்தார். இது மக்களை திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி இருந்தார். இதனையடுத்து, "தங்கள் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?," என்று நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார். இதையடுத்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிர்மலா சீதாராமன், “மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்” எனக்கூறியிருந்தார்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.

மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த பிப்ரவரி மாதம், பினராயி விஜயன் வெளியிட்ட பதிவே இதற்கு சாட்சி என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் பினராயி விஜயனின் பதிவையும் இணைத்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இந்த பதிலடியை கொடுத்துள்ளார்.