தமிழக செய்திகள்

மதுராந்தகம்,பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து, வேலுமணி ஆதரவு 3 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது.

தமிழக அரசியல் களம்

ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும் என கருத்துக்கணிப்பு கூறிய நிலையில், அந்த கருத்துக்கணிப்பு அப்படியே தலைகீழாக மாறிப்போனது.

த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. 2-ம் இடமும், அ.தி.மு.க. 3-ம் இடமும் பிடித்தன. த.வெ.க. 108 இடங்களை பெற்று இருந்தபோதிலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. இந்தநி லையில் தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதர வோடு த.வெ.க. ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவு வெளி யான பிறகு முதல் திருப்பமாக இது இருந்தது.

அடுத்ததாக சட்டசபையில் த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தபோது அ.தி.மு.க. தரப் பில் வெற்றி பெற்று இருந்த 47 எம்.எல்.ஏ.க்களில் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தினார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்த 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்து இருந்தனர். இதனால் அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டது.

எடப்பாடி பழனிசாமி

இதனையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி சார்ந்த நடவடிக்கைகளை கையில் எடுத்தார். இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார்கள்.

இப்படி பரபரப்பான சூழல் தொற்றிக்கொண்டிருந்த நேரத் தில் அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிட்டு 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சத்தியபாமா, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத் தில் போட்டியிட்டு 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்த மரகதம் குமரவேல், ஈரோடு மாவட்டம் பெருந்து றையில் போட்டியிட்டு 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சட்டசபை வளாகத்துக்கு நேற்று மதியம் வந்தனர்.

ராஜினாமா

அவர்கள் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இந்த விவரம் காட்டுத்தீபோல் பரவியது.

இவர்கள் 3 பேரும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தரப்பை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ராஜினாமாவை சபாநாயகரும் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

ராஜினாமா கடிதம் வழங்கிய கையோடு, அந்த 3 பேரும் அதே தலைமைச்செயலக வளாகத் தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தனர். அவர்கள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து, தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர். அப்போது அவர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பொன்னாடை போர்த்தினார். சிறிது நேரம் அந்த அறையில் அவர்கள் பேசினார்கள்.

இந்தநிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்த நிலையில், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலி என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மூவரின் ராஜினாமாவை ஏற்ககூடாது என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த திட்டமிட்டநிலையில் அரசிதழில் வெளியானது.

மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேரின் ராஜினாமா கடிதத்தை ஏற்கக்கூடாது என சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், இன்பதுரை ஆகியோர் வலியுறுத்தினர். சட்டமன்ற குழு தலைவர், கொறடா உத்தரவரை மீறி வாக்களித்ததால் ராஜினாமாவை ஏற்க கூடாது என கோரிக்கை வைத்தனர்.

கொறடா உத்தரவை மீறியது தொடர்பான அ.தி.மு.க. மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ராஜினாமா முடிவை எப்படி சபாநாயகர் ஏற்கலாம் என அவர்கள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.