மதுரை,
கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார் குறித்து இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி விக்டோரியா கவுரி பேசினார்.
மதுரை ஐகோர்ட்டின் பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டி சார்பில் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்தது. இதில் இந்த கமிட்டியின் தலைவரும், ஐகோர்ட்டு நீதிபதியுமான விக்டோரியா கவுரி கலந்து கொண்டு பேசியதாவது:-
பாலியல் வன்கொடுமையோ, துன்புறுத்தலோ நடந்தால், அதை நாம் எவ்வாறு கையாள்வது, புகார் கொடுக்க யாரை அணுகுவது என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரியுமா? என்றால் கேள்விக்குறிதான். 1988-ல் பஞ்சாப்பில் நடந்த ஒரு விருந்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரூபன் தியோல் பஜாஜ் பங்கேற்றார். அவரிடம், அப்போதைய டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார். இது தொடர்பான புகாரின்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றத்தை உறுதி செய்து, கில்லை நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கும் படி உத்தரவிடப்பட்டது. புகாருக்கு ஆளான கில், சிறையில் வைக்கப்படவில்லை.
மனம் வெறுத்து போன அந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெண்களுக்கான அமைப்பிடம் ஒப்படைத்து விட்டார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஒரு எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார்.
அது, பணியிடத்தில் துன்புறுத்தல் இல்லையா? இந்த சம்பவம் குறித்து பக்கத்து மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றும் அவரது கணவர் புகார் கொடுத்துள்ளார். இன்றுவரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.