தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏ. மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை: சென்னை ஐகோர்ட்டு

தவெக எம்.எல்.ஏ. மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை,

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்ச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக்கோரியும், அவரை பதவி விலகக்கோரியும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தவெக எம்.எல்.ஏ. மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு. த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப் படும் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தவெக எம்.எல்.ஏ. மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக வக்கீல் என்.ஆர்.இளங்கோ முறையிட்டார். அப்போது குறுக்கீட்ட நீதிபதி, தவெக எம்எல்ஏ மீதான பெண் அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை; தமிழக காவல் துறையே திறமையான அமைப்புதான்; தமிழ்நாடு காவல் துறையில் திறமையான அதிகாரிகள் உள்ளனர். வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் தமிழகத்தில் சிபிஐ கிளைதான் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், முன்னதாக நடைபெற்ற இதே விவாகாரத்தின் விசாரணையின்போது மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணை மாலை 3.30 மணிக்கு காணொலி காட்சி மூலமாக நடத்தப்படும் என தெரிவித்த நீதிபதி விசாரணையை மாலை ஒத்திவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT