தமிழக செய்திகள்

பேரம் பேசவில்லை... திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: திருமாவளவன்

தவெகவை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என்று திருமாவளவன் கூறினார்.

சென்னை,

வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-.

தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்-அமைச்சர் ஆவது எளிதல்ல என்பது எனக்கு தெரியும். பாஜக ஆதரவு கட்சி என தவெகவை விமர்சித்துள்ளேன்; அதில் மாற்றுக்கருத்து இல்லை. தவெக அரசின் அமைச்சரவையில் நாங்கள் ஒருபோதும் இடம்பெறமாட்டோம். அதை ஏற்கனவே கூறிவிட்டேன்.

குடியரசு தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். மீண்டும் தேர்தல் வந்துவிடக்கூடாது, அதற்கு விசிக துணையாக இருந்துவிட கூடாது என தவெகவை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். இதில் ரகசியமாக எதுவும் நடக்கவில்லை. எல்லாமே வெளிப்படையாக நடக்கிறது. எல்லாரை சுற்றியும் வதந்தி நடக்கும். திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.

என்னை முதல்-அமைச்சராக திமுக, அதிமுக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை. அனுமானமாக கேட்ட கேள்விக்கு அவ்வாறு பதில் சொன்னேன். சில நலம் விரும்பிகளே பேசினர். கிசுகிசுக்கள், முணுமுணுப்புகள் அடிப்படையிலேயே நான் பேசினேன். நான் முதல்-அமைச்சர் என கூறப்பட்ட கருத்தை கேளிக்கையாகவே எடுத்துக்கொண்டேன்.

நாங்கள் ஒரு கட்சி நடத்துகிறோம். கம்யூனிஸ்ட்கள் முடிவு எடுக்கும்போதே நாங்களும் முடிவு எடுப்போம் என நினைக்க கூடாது. எங்கள் கட்சி தோழர்களிடம் பேசி தான் நாங்கள் முடிவுசெய்வோம். உடனே பேரம் பேசுகிறோம் என சொல்வது நியாயமல்ல. எங்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது. இரண்டு இடக்ளை வைத்துக் கொண்டு நான் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை. 2 சீட்டுகளை வைத்துக்கொண்டு யாருடனும் நாங்கள் பேரம் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.