ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் இறங்கிய விபத்தில், காரில் பயணம் செய்த 6 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அந்த வழியாக 6 பேர் பயணம் செய்த கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கார் இறங்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியினர் உதவிக்கு வந்தனர்.
இதற்கிடையே, பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படவில்லை என்றும், பள்ளத்தைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்புகளும் அமைக்கப்படவில்லை என்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதே பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கவும், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.