சென்னை,
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.யிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புகார் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக கவர்னர் அர்லேகரை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. நேற்றைய தினம் கைது செய்யப்படுவார் என அனைவரும் நேற்று எதிர்பார்த்தோம். ஆனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் நான் கொடுத்த பேட்டியை நீக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டுள்ளனர்.
இன்று தமிழக கவர்னரை சந்தித்து, த.வெ.க. ஆட்சி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, எனவே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.
கடந்த ஜூலை 31-ந்தேதியே தலைமை செயலாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் கலெக்டர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் 116 நாட்களாக தலைமை செயலாளர் குற்றத்தை மறைக்க முயற்சி செய்துள்ளார். முதல்-அமைச்சருக்கு இந்த விவகாரம் தெரியாதா? அல்லது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாரா?
அப்படி இருந்தால், அவரும் இந்த குற்றத்தில் சேர்க்கப்பட வேண்டும். முதல்-அமைச்சர் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல் குற்றவாளிகள் பக்கம் நிற்கிறார். மேலும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என கடந்த ஒரு மாத காலமாக 3 அமைச்சர்கள் சொன்னார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.