சென்னை,
மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், கர்நாடக வனத்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகங்களைக் கருத்தில் கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்குவதோடு, இந்தச் சம்பவத்தில் உண்மை நிலையை வெளிக்கொணர கர்நாடக அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.