தமிழக செய்திகள்

பட்ஜெட்டில் எந்தவொரு முக்கிய அறிவிப்பும் இல்லை - எடப்பாடி பழனிசாமி

குழு அமைத்தால் எப்படி வருவாயைப் பெருக்க முடியும்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகப்பெரிய ஏமாற்றம்

இன்று பட்ஜெட்டில் எந்த ஒரு முக்கியமான அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏற்கனவே இருக்கும் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று தவெக ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்கள் ஆகின்றன. இதுவரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

எல்லாவற்றிற்கும் ரீல்ஸ்தான் சாதனையாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு புதிய திட்டங்களும் இடம்பெறவில்லை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், முதியோர் உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என்பதுடன் பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

பட்ஜெட்டில் எதுவுமே இல்லை

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுவதும் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனில் பாதி தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தனர். ஆனால் அதற்கு மாறாக ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. அதுவும் ஒரு ஏமாற்று வேலை.

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படும் என்று கூறினார்கள். நிறைய திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால் அந்தத் திட்டங்கள் எதுவுமே பட்ஜெட்டில் தெரிவிக்கப்படவில்லை.

எப்படி சரி செய்யப்போகிறார்கள்?

வருவாய் பற்றாக்குறை ரூ.55 ஆயிரம் கோடி என்று சொல்லியிருக்கிறார்கள். நிதிப் பற்றாக்குறை ரூ.1 லடசத்து 21 ஆயிரம் கோடி என்று சொன்னார்கள். இதை எப்படி சரி செய்யப்போகிறார்கள்?

இதனை சரி செய்ய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்ற விளக்கம் கொடுக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் நிதி ஆதாரத்தைப் பெருக்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தார்கள். பிறகு 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கினார்கள்.

தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். ரூ.17 ஆயிரம் கோடி வருவாயை செலவு செய்துள்ளார்கள். வருவாய் இல்லாமல் எப்படி புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும்?

எப்படி வருவாயைப் பெருக்க முடியும்?

ஏற்கனவே உள்ள அறிவிப்புகளை மாற்றி அறிவித்துள்ளனர். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடனை எப்படி அடைக்கப்போகிறீர்கள்? இதையெல்லாம் இந்த அரசு எப்படி சரிசெய்யும் என்ற விளக்கம் இல்லை. கடன் வாங்கித்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதுதான் உண்மை.

குழு அமைத்தால் எப்படி வருவாயைப் பெருக்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.