தமிழக செய்திகள்

அதிமுக தொண்டர்களை திசை திருப்புவதற்கு எத்தனை ஆயுதங்களை திமுக எடுத்தாலும் அது கைகூடாது - ஆர்.பி. உதயகுமார்

தேசிய ஜனநாயக கூட்டணி தனி பெரும்பான்மையோடு வெற்றிபெறும் என்ற நல்ல செய்தி நாளை வரும் என ஆர்.பி. உதயகுமர் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

நாளை சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நேரம் நாளை மதியம் 2 மணிக்குள் எந்த கட்சி லீடிங்கில் உள்ளது என்பது தெரிந்துவிடும். ஆனாலும் மாலை வரை தேர்தல் இறுதி முடிவிற்காக காத்துகொண்டு தான் இருக்க வேண்டும். ஏனென்றால் எந்த நேரத்திலும் முடிவுகள் மாறக்கூடும். அதுவும் இந்த தேர்தல் கணிக்கமுடியாத ஒரு தேர்தலாகவே இருக்கின்றது. கருத்து கணிப்புகளை வைத்து கூட இந்த கட்சி தான் வெற்றிபெறும் என உறுதியாக சொல்ல முடியவில்லை.

அந்தளவிற்கு இந்த தேர்தலில் பலத்த போட்டி இருக்கும் என தெரிகின்றது. மும்முனை போட்டியாக இல்லாமல் நான்கு முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்திருக்கின்றது. கருத்து கணிப்புகள் எப்படி இருந்தாலும் நாங்கள் வெல்லப்போவது உறுதி என அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அதிமுக கூட்டணியின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்து பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-

நாளை ஒரு நல்ல தீர்ப்பு வரும். எடப்பாடி பழனிச்சாமிதலைமையிலான அதிமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெறும். தேசிய ஜனநாயக கூட்டணி தனி பெரும்பான்மையோடு வெற்றிபெறும் என்ற நல்ல செய்தி நாளை வரும். எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக நல்ல தீர்ப்பு நாளை வரவுள்ளது. இந்த தேர்தல் களத்தில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் வேட்பாளர்களிலேயே முதன்மையானவராக இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

எல்லாராலும் வரவேற்கக்கூடிய சாமானிய மக்களோடு மக்களாக இருப்பவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. எனவே கண்டிப்பாக அவர் தான் முதலமைச்சர். அதற்கான தீர்ப்பு நாளை வரும். அதிமுக தொண்டர்களை திசை திருப்புவதற்கு எத்தனை ஆயுதங்களை திமுக எடுத்தாலும் அது கைகூடாது என்றார்.