உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்

மும்மொழி கொள்கையை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தடுத்து நிறுத்துவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தனித்தன்மையுடன் இயங்குகிறது

நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில், "தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்திருக்கிறது. இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனி நாடாக இயங்கவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியை திணிப்பதுதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதை மதித்து, அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு விருப்பமான மொழி கொள்கையை பின்பற்ற அனுமதிப்பதே இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமையும்.

நாட்டுப்பற்று

இந்திய–சீன போர்', 'வங்கதேச விடுதலை போர்', 'கார்கில் போர்', 'குஜராத் நிலநடுக்கம்' என நம் நாடு சந்தித்த ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும், தமிழர்கள் தங்களுடைய நாட்டுப்பற்றை வேறெந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் குறைவில்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தி மொழி திணிப்பு வேண்டாம்

எனவே, 'இந்தி மொழி திணிப்பு வேண்டாம்' என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியை கற்பதற்கும் நாட்டுப்பற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இருமொழி கொள்கையை பின்பற்றும் தமிழ்நாடுதான் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

முதலிடம் வகிக்கிறது

உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி அறிவியலாளர்கள் வரை, இந்தி தெரியாமலேயே தமிழர்கள் சாதனைகளை படைத்துள்ளனர்.

வளர்ச்சி இன்ஜின்

எனவே, இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவை சந்திக்கவில்லை; மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழ்நாடு விளங்குகிறது.

தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது

நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம். அரசியலமைப்பு சட்டத்தில், கல்வி ஒத்திசைவு பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரி பள்ளிகள் எனும் உண்டு-உறைவிட பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

நவோதயா பள்ளிகள்

அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றிபெற்று, நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காக தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதி நிலையை தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பை கொண்டே சிறப்பாக செயல்பட முடியும்.

3,548 கோடி நிலுவை தொகை

மேலும், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 3,548 கோடி ரூபாயை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.

மகிழ்ச்சியளிக்கிறது

தற்போது அந்த வழக்கில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரகம் நமது இருமொழி கொள்கையை பின்பற்றி, நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க தேவையில்லை என்பதை தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிலைப்பாட்டில், தற்போதைய அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும்.

தனி தீர்மானம்

மேலும், தேவை எழுந்தால் உடனடியாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கட்டி, நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, தனி தீர்மானம் இயற்றிட வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.

தடுத்து நிறுத்துவோம்!

பேரறிஞர் அண்ணாவால் இம்மண்ணில் விதைக்கப்பட்ட இருமொழி கொள்கையை, அரசியல் வேறுபாடுகளை கடந்து சுப்ரீம் கோர்ட்டில் நிலைநாட்டுவோம்! மும்மொழி கொள்கையை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தடுத்து நிறுத்துவோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT