சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி உள்ளது. சென்னையின் நுழைவு வாயில் போல அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்து வரும் நிலையில், தற்போது பரனூர் சுங்கச்சாவடியில் தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் தானாகவே வசூலித்துக்கொள்ளும் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இனிமேல் வாகனங்கள் செல்லும் போதே சுங்கச்சாவடிக்கான கட்டணம் அவர்களின் பாஸ்டேக்கில் இருந்து பிடித்துக்கொள்ளப்படும். இதற்காக சுங்கச்சாவடிக்கு முன்பாக சில மீட்டர்கள் தொலைவில் அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களின் எண் உள்ளிட்டவை துல்லியமாகப் படம் பிடிக்கப்பட்டு, வாகனத்திற்கான சுங்கக் கட்டணம் பிடித்துக்கொள்ளப்படும்.
இதன் காரணமாக வாகனங்கள் இனி டோல்கேட்டில் பாஸ்டேக் ஸ்கேன் செய்வதற்காக காத்திருக்க வேண்டியது இல்லை. இதற்கு முன்பு வரை சில நிமிடங்கள் வரை லேனில் வாகனஙக்ள் காத்திருக்கும். இதனால், போக்குவரத்து அதிகமாக உள்ள நாட்களில் வரிசையாக நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் வந்துவிடும் என்பதால் பயணிகளும் வாகன ஓட்டிகளும் பரனூர் சுங்கச்சாவடியை தாண்டுவதற்குள் படாதபாடு பட வேண்டியிருந்தது. தற்போது அதிநவீன ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் இனி அந்த சிரமம் இல்லை. சொந்த ஊர்களில் இருந்தும் வரும் போதோ, சொந்த ஊர்களுக்கு செல்லும் போதோ பரனூர் டோலில் சில நிமிடங்கள் வீணாவது இனி குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை (MLFF) இன்று (அக். 1-ம் தேதி) முதல் பயன்பாட்டுக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரனூர் சுங்கச்சாவடிக்கு முன்பாக வாகன ஓட்டிகள் செல்லும் போதே அதிநவீன கேமராக்கள் வாகனங்களை துல்லியமாகப் படம் பிடிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன. ஆர்எஃப்ஐடி ரீடர்கள், ரேடார் ஸ்கேனர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் சாலையில் கேமராக்கள் பொருத்தப்பட்ட உயரமான கேன்ட்ரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள உயர்தர கேமராக்கள் வாகனத்தின் எண்களையும், ஃபாஸ்டேக் கணக்கையும் நொடியில் படித்து, அதற்கேற்ப கட்டணத்தை வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே பிடித்துக்கொள்ளும். ஃபாஸ்டேக் வேலை செய்யாத பட்சத்தில், இந்த கேமராக்கள் வாகன எண்களைப் புகைப்படமாக எடுத்து மாற்று வழியில் கட்டணம் வசூலிக்க உதவும். பாஸ்டேக் இல்லாமலோ அல்லது போதுமான பேலன்ஸ் இல்லாமலோ சென்றால், அவர்களுக்கு அபராதச் செலான் அனுப்பப்படும்.