திண்டுக்கல்,
எங்களுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
அதிமுக பிளவு
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரபரப்பாக இருந்து வருகிறது. அதிலும் தேர்தலில் 47 இடங்களை வென்ற அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் என 2 ஆக பிரிந்தது.
சட்டசபையில் த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும் கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதேபோல எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு, கடந்த ஜூன் 25 அன்று எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணியை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டார்.
இந்த சூழலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அதிமுக கொடிகள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் ஏதுமின்றி தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய வேலுமணி, “தேர்தல் முடிந்து அடுத்த 25 நாட்கள் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். என்னை நம்பி 30 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்காமல் தனக்கு மட்டும் பதவி கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் வீரமணி போன்ற கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த மூத்த தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு தமக்கு மட்டும் பதவி தருவது அநீதியானது. எனவே எடப்பாடி பழனிசாமி கொடுத்த துணைப் பொது செயலாளர் பதவியை ஏற்கப் போவதில்லை. அதிமுகவை திமுகவுடன் இணைப்பது அல்லது கூட்டணி வைப்பது போன்ற பேச்சுக்கள் எழுந்ததாலேயே உள்கட்சிப் பூசல் வெடித்தது. எம்.ஜி.ஆர் திமுகவை எதிர்ப்பதற்காகவே கட்சியைத் தொடங்கினார் என்பதால் திமுகவுடன் சமரசம் ஆவதை ஒருபோதும் ஏற்க முடியாது அதேநேரம் தான் அதிமுகவிலேயே நீடித்து திமுகவை தொடர்ந்து எதிர்ப்பேன்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பழனியில் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து புதிய பதவிகளைப் புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் கூட்டாக பேட்டி அளித்தனர். எஸ்.பி. வேலுமணி கூறுகையில்,
எங்களுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரனை சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார்.