தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மீன் வாங்க ஆளில்லை... தசரா விரதத்தால் விலை சரிவு!

மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

தூத்துக்குடி,

தசரா திருவிழாவுக்கு பக்தர்கள் விரதமிருப்பதால், தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்தது. கேரை மீன் கிலோ ரூ.230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். இவர்களுக்கு மீன்பாடு சரிவர இல்லாததால் நேற்று திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. கேரை மீன்கள் வரத்து அதிகம் காணப்பட்டது. ஆனால் சீலா மீன்களின் வரத்து முற்றிலும் இல்லை.

விரதமிருக்கும் பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றனர்.

எனவே மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் குறைந்ததால் மீன்களின் விலையும் குறைந்தது.

விலை விவரம்

நேற்று விளைமீன். ஊளி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும், கேரை மீன்கள் கிலோ ரூ.230 வரையும், நண்டு கிலோ ரூ. 600 வரையும் விற்பனையானது.

மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர். மேலும் தசரா திருவிழாவுக்கு பின்பு மீன்களின் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT