சென்னை,
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாட்டின் அடுத்த பிரதமராக விஜய் வருவார் என்று தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் , கட்சி நிர்வாகிகள் சிலர் கூறிவருகின்றனர். இதற்கு தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் விமர்சனம், எதிர் கருத்தை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மோடிக்கு இணையாக மற்றொரு பிரதமரை யாரும் சிந்தித்து பார்க்க முடியாது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அடுத்த பிரதமர் என விஜய்-ஐ தவெகவினர் முன்னிறுத்துவது குறித்து பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த தமிழிசை கூறுகையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்துள்ளனர். அந்த வாய்ப்பை அவரும், அவரது கட்சியினரும் சரியாக பயன்படுத்த வேண்டும். மோடிக்கு இணையாக மற்றொரு பிரதமரை யாரும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது. மோடி 3 முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 12 ஆண்டுகள் மட்டுமல்ல 25 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் உள்ளார். அவர் நெடுங்கால அரசியல் வாழ்க்கையை பெற்றுள்ளார்.
பிரதமர் மோடிக்கு இணையாக யாரையும் பேச முடியாது. விஜய் தற்போது தமிழக மக்களால் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த வேலையை அவர் முழுமையாகவும், சரியாகவும் செய்ய வேண்டும். பிரதமர் மோடிக்கு இணையாக யாரையும் பேச முடியாது. ஜனநாயகத்தில் அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. ஆனால், அதைப்போல் நடக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.