தமிழக செய்திகள்

'என்னை யாரும் தேட வேண்டாம்'; பெற்றோருக்கு கடிதம் எழுதிவிட்டு காதலனுடன் சென்ற மாணவி

அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை உடனடியாக தனது மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

சிங்காநல்லூர்,

கோவையை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்று வருகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு பையுடன் வெளியே சென்றார். இதற்கிடையே அந்த மாணவியின் தந்தை வெளியே சென்ற போது, அவர் தனது மகளின் தோழியை பார்த்தார். அப்போது அவரிடம் எனது மகள் கல்லூரிக்கு சென்றுவிட்டார். ஆனால் நீ ஏன் செல்லவில்லை என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் கல்லூரி வருகிற 10-ந் தேதி தானே திறக்கிறது என்று கூறி உள்ளார்.

கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயம்

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை உடனடியாக தனது மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரிடம் பேச முடியவில்லை. உடனே அவர் தனது வீட்டுக்கு சென்று மகளை தேடினார். ஆனால் அவர் அங்கு இல்லை. அவருடைய அறையில் ஒரு கடிதம் மட்டும் இருந்தது. அந்த கடிதத்தில் நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவருடன் செல்கிறேன். எனவே என்னை யாரும் தேட வேண்டாம் என்று எழுதப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகளின் செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்டார். அப்போது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அவர் தனது மகளை அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள் வீடு என அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே அவர் தனது மகள் மாயமானது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான அந்த கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.