சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் அர்லேகரை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர். த.வெ.க. வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக கவர்னரிடம் தி.மு.க. நிர்வாகிகள் புகார் அளித்தனர். மேலும், தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் கவர்னரிடம் தி.மு.க. புகார் அளித்தது.
கவர்னர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. எம்.பி.வில்சன், தி.மு.க. சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-
தவெக அரசு குதிரைபேரம் செய்து வருகிறது. இது தொடர்பான புகார்களை முழுமையாக விசாரித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனிதா ராதாகிருஷ்ணனை 5 மணி நேரம் போலீசார் துன்புறுத்தியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது தவெக அரசு. தி.மு.க. ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கெல்லாம் யாரையும் கைது செய்ததில்லை. முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு தனி நபர்கள் உத்தரவு போடுகின்றனர்.
தவெக குதிரை பேரம் செய்து வருவதாக கவர்னரிடம் புகார் அளித்தோம். ரூ.50 கோடி தருவதாகக் கூறி வேப்பனஹள்ளி தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவாசனிடமும் குதிரை பேரம் நடத்தியது தவெக. நீங்கள் இளைஞர், தவெகவுக்கு வாருங்கள் என சீனிவாசனை அழைத்துள்ளனர். நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டினிடம் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தால் அமைச்சரவை தருவதாக கூறி இருக்கின்றனர். தவெகவில் சமீபத்தில் இணைந்த சி.விஜயபாஸ்கரும் குதிரை பேரம் செய்கிறார்
இதுதொடர்பாக கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கவர்னர் அர்லேகரை சந்தித்து இருந்தார். இந்த சந்திப்பின் போது, உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், ஒரு பெண் குழந்தையிடம் முறையின்றி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். தவெக அரசுக்கு எதிராக இன்று ஒரே நாளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி கவர்னரிடம் புகாரளித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.