கோவை,
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“நல்லாட்சி தொடர வேண்டும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்ல வேண்டும், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். ஒரே நாளில் முடிவுகள் மாறுவதற்கோ, மக்களின் மனநிலை மாறுவதற்கோ வாய்ப்பில்லை.
நாங்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறோம். ஆனால் 145 தொகுதிகள் என்று சொல்வது கருத்து கணிப்பு இல்லை, கருத்து திணிப்பு. இன்னும் 24 மணி நேரம் இருக்கிறது. நாளை மறுநாள் எல்லோரும் சந்திக்கப் போறோம், அப்போது பேசுவோம்.
எங்களைப் பொறுத்தவரை 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் செய்துள்ளனர். அதோடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்துள்ளார். இந்த உழைப்பு வீண் போகாது. யார் ஆள வேண்டும், யார் ஆளக்கூடாது என்பதில் மக்கள் புரிதலோடு இருக்கிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.