தமிழக செய்திகள்

ஆளுங்கட்சி அவுட்... ஆண்ட கட்சி 3-வது இடம்... புதிய கட்சி முதலிடம்: இது ஒரு விசித்திரமான தேர்தல்

அருதிப்பெரும்பான்மை கிடைக்காததால், த.வெ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. என்றாலும், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. இடையேதான் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஆளுங்கட்சியான தி.மு.க.வையும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வையும் பின்னுக்கு தள்ளி, புதிய வரவான த.வெ.க. முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்து இருக்கிறது. என்றாலும், அருதிப்பெரும்பான்மை கிடைக்காததால், த.வெ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

மொத்தத்தில், நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலை விசித்திரமான தேர்தல் என்றே கூறலாம்.

ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., தற்போது 2-வது இடத்திற்கு பின்தங்கியபோதும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததால், அவரால் எதிர்க்கட்சித் தலைவராககூட முடியவில்லை.

தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தி இருந்தாலும், அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால், அவரால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

முதல் தேர்தலிலேயே முதலிடம் பிடித்தும், பெரும்பான்மை கிடைக்காததால், த.வெ.க. தலைவர் விஜய்யால், முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர முடியவில்லை.

களம் கண்ட 3 சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு, ஒரு இடத்தில்கூட நாம் தமிழர் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே கடலூர், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், இந்த முறை காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு, டெபாசிட் கூட பெற முடியவில்லை.