மதுரை,
தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்சி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் என்றும் தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் பதிலளித்துள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.நவீன்குமார் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன.
இருப்பினும், இதற்கென மாநில அரசு தெளிவான விதிகளை வகுக்காததால், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பைக் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், பைக் டாக்சி நிறுவனங்களை கட்டுப்படுத்தாமல், ஓட்டுநர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது. மத்திய அரசின் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பைக் டாக்சிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை (Motor Vehicle Aggregator Guidelines) உடனடியாக உருவாக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், “பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் 'கும்டா' (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு விரிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளது. கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்சி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும்” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பைக் டாக்சிகளுக்குத் தற்போது அனுமதி இல்லை என்றால், அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு ஏன் விளம்பரப்படுத்தவோ அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தவோ கூடாது? பைக் டாக்சிகளில் பயணத்தின்போது விபத்து ஏதும் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து அரசு விரைந்து கொள்கை முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.