சென்னை,
இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற அந்தஸ்தை கேட்க முடியாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த ஜூன் 25-ந்தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி இருந்தன.
இந்த போராட்டங்களின்போது தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ததாகவும், அந்த பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி சென்னையை சேர்ந்த ஆர்.கார்த்திகேயன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சட்டம் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதிகள் சுதந்திரமாக முடிவு எடுப்பதுதான் உண்மையான நீதித்துறை சுதந்திரம். அதுவே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பல வழக்குகளின் தீர்ப்பில் கூறியிருக்கிறது.
அந்த வகையில், நீதித்துறை முடிவுகளுக்காக தனிப்பட்ட முறையில் நீதிபதிகளை அவதூறு செய்வது சட்ட நடைமுறையின் வேரையே பாதிக்கும். நீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவிக்க குடிமக்களுக்கு உரிமை இருந்தாலும் கூட, தனிப்பட்ட முறையில் நீதிபதிகளை தாக்கி பேச முடியாது. அது பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராது.
அனைத்து பொது விவாதங்களும் சரி, அமைதியான கூட்டங்களுக்கும் தடைவிதித்துவிட முடியாது. ஆனால் நீதித்துறை சார்ந்த முடிவுகளை எதிர்த்து பொதுக்கூட்டங்கள், பேரணி, போராட்டங்கள் போன்றவற்றை நடத்த அனுமதி அளிக்க விண்ணப்பங்கள் வரும்போது, அந்த விண்ணப்பங்களை போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக ஆய்வு செய்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
நீதிபதிகளை தனிப்பட்ட முறையில அவதூறு செய்யும் விதமாக பொதுக்கூட்டங்களோ, பேரணியோ நடத்த எந்த அனுமதியும் வழங்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட கூட்டங்களிலும் நீதிபதிகள் மீது தனி நபர் தாக்குதல் நடத்தும் வகையில் அந்த கூட்டங்கள் மாறினால் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதிகளுக்கு தனிப்பட்ட முறையில அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் பதிவிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். சட்டவிரோதமாக செயல்படுபவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளனர்.