தமிழக செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

சென்னை,

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக சமையல் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்படுமா என்பது பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது;

அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. மருத்துவ துறையின் செயலாளர் தலைமையில் அனைத்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு மருத்துவமனைகள் தலைவர்களுடனும் கூட்டம் நடத்தப்பட்டது. எரிவாயு தட்டுப்பாடு பிரச்சனைக்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்டவ், விறகு அடுப்பு போன்ற அடுப்புகளை பயன்படுத்தி ஆஸ்பத்திரிகளில் உள்ள மருத்துவ பயனாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொடர்ந்து அனைத்துக் கல்லூரி முதல்வர்களுடன் பேசி வருகிறேன். எங்கேயும் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. மருத்துவப் பயனாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகளுடன் புரோட்டின் உணவுகளையும் சேர்த்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.