மேட்டூர்,
"பருவத்தே பயிர் செய்" என்று பழமொழி ஒன்று சொல்வார்கள். அதாவது, 'சரியான பருவத்தில் விதைத்தால் தான் குறிப்பிட்ட காலத்தில் விளைச்சல் தரும்' என்பதே அதன் பொருள். அந்த வகையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
மழை காலங்களில் காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும் தண்ணீரை தேக்கிவைத்து, குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்திக்கொள்வதற்காக, 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. 120 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பை பொறுத்து, ஜூன் மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது கால தாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதத்துடன் நிறுத்தப்படும். அதன்பிறகு, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நாளை (ஜூன் 12-ம் தேதி) தண்ணீர் திறப்பு இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது, குறுவை சாகுபடிக்கு நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 118.17 டி.எம்.சி. தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30 ஆயிரத்து 800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 7.51 டி.எம்.சி. தண்ணீரும் மேட்டூர் அணையில் இருந்து தேவைப்படுகிறது.
இதுபோக, சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 12 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 268.47 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
தண்ணீர் தேவை இவ்வாறு இருக்க, மேட்டூர் அணையிலோ நீர் இருப்பு 79 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது. அதனால், இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடியும் பொய்த்து போய் உள்ளது.
இனி, கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். குறுவை பொய்த்தாலும், சம்பா, தாளடி சாகுபடிக்கு நீர் திறந்துவிட வாய்ப்பாக அமையும்.
எப்போதும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால்தான் அது சாத்தியம். தற்போதைய சூழ்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 7 முறை நிரம்பி மேட்டூர் அணை
மேட்டூர் அணை வரலாற்றில் கடந்த 2025-ம் ஆண்டு 7 முறை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி சாதனை படைத்தது. முதல் முறையாக ஜூன் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து, ஜூலை 5, ஜூலை 20, ஜூலை 25, ஆகஸ்டு 20, செப்டம்பர் 2, அக்டோபர் 20 ஆகிய தேதிகளிலும் முழுக்கொள்ளளவை எட்டியது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால், மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது. 92 ஆண்டு கால மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் 7 முறை நிரம்பியது இதுவே முதல் முறை.