தமிழக செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் குறைகளை களைய தொடர்பு அதிகாரிகள் நியமனம்- சுகாதாரத்துறை உத்தரவு

அரசு ஆஸ்பத்திரிகளில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தொடர்பு அதிகாரி’ நியமிக்கபட்டு உள்ளார்

சென்னை,

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரிகளில் சீர்கேடுகளை சரி செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. மருத்துவ உட்கட்டமைப்பு, சுகாதாரம், டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை சரி செய்தல், அடிப்படை வசதி உறுதி செய்தல் அவசியம் என அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து அனைத்து மருத்துவ கல்லுாரி ஆஸ்பத்திரிகளிலும், 50 தொடர்பு அதிகாரிகளை நியமிக்க மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மாநில அளவில் ஒருங்கிணைக்கும் வகையில், பேராசிரியர் சுதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு ஆஸ்பத்திரிகளில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தொடர்பு அதிகாரி’ நியமிக்கபட்டு உள்ளார். அதைதொடர்ந்து, அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ நிலைய அதிகாரி அல்லது கண்காணிப்பாளர் ஆகியோரில் ஒருவர் தொடர்பு அதிகாரியாக செயல்படுவார்.

அவர்களுக்கு கீழ், டாக்டர்கள், செவிலியர்கள் செயல்படுவார்கள். இவர்களை மாநில அளவில் ஒருங்கிணைக்க, ஒரு தொடர்பு அதிகாரி அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக, மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில், ‘தொடர்பு அதிகாரி’ என்ற புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளது. குறைபாடுகளை ஆய்வு செய்து சீரமைக்கப்பட்ட பணிகளை அறிக்கையாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’என்றனர்.