சென்னை,
தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், 'எல்நினோ' தாக்கத்தால் மழை அதிகம் பெய்யவில்லை. எதிர்பார்த்த மழை இல்லாததால் பல இடங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.
இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு விலக தொடங்கியது. அடுத்ததாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது.
இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதேநேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.
மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியபகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மன்னார்வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுபாதை நிலவுகிறது.
இதையொட்டி இன்று (15.10.2026) விருதுநகர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை. தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் வருகிற டிசம்பர் மாதம் வரை காணப்படும். இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக பருவமழை தொடங்கும் போதே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.