சென்னை,
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேனாம்பேட்டை மண்டலம், ரட்லேண்ட்கேட் 2ஆவது தெருவில் உள்ள நுங்கம்பாக்கம் கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இன்று (04.10.2026) வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111க்குட்பட்ட, ரட்லேண்ட்கேட் 2ஆவது தெருவில் உள்ள நுங்கம்பாக்கம் கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர். கௌஷிக் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர், மாநகராட்சி ஆணையாளர் செய்தியாளருக்கு அளித்த பேட்டி:
சென்னை மாநகரப் பகுதியில் இருக்கின்ற பல்வேறு பிரதான கால்வாய்கள் தூர்வாரும் திட்டத்தை ஆய்வு செய்துள்ளோம். குறிப்பாக மண்டலம் 9-இல் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் கால்வாய் 1430 மீட்டர் (1.4 கிலோமீட்டர்) நீளமுடையது. இக்கால்வாயானது ஸ்டெர்லிங் சாலையில் தொடங்கி திடீர் நகர் பகுதியில் கூவம் ஆற்றுடன் இணைகிறது.
இப்பகுதியில் உள்ள பல்வேறு பிரதான மழைநீர் வடிகால்களின் நீர் வெளியேற்றும் மையமாக இந்த நுங்கம்பாக்கம் கால்வாய் திகழ்கிறது. இது இயற்கை கால்வாய் அல்ல, மனிதனால் அமைக்கப்பட்ட பூசப்படாத மண் கால்வாயாகும்.
இக்கால்வாயின் ஆரம்பப் புள்ளியிலிருந்து தூர்வாரி, தற்போது 800-ஆவது மீட்டரில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீரைச் சரியாகக் கூவத்தில் கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பாப்கேட் மற்றும் சறுக்கு சக்கர வண்டி ஏற்றும் எந்திரங்கள் மூலமாகத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியில் இதுபோன்று 60 பாப்கேட் எந்திரங்கள் பல்வேறு மண் கால்வாய்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 6 நிலம்-நீர் ஆகிய பகுதிகளில் அகழ்ந்தெடுத்து வேலை செய்யும் இயந்திரங்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள், உள்ளிட்ட பல்வகை இயந்திரங்களைப் பயன்படுத்தி, இயற்கை மற்றும் மனிதனால் அமைக்கப்பட்ட 44 கால்வாய்கள், நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 கால்வாய்கள் என மொத்தம் 57 கால்வாய்களிலும் தூர்வாருதல், ஆகாயத்தாமரைகளை அகற்றுதல், சிறு பாலங்களின் அடியில் தூர்வாருதல் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்படுகின்றன.
நமச்சிவாயபுரம், விருகம்பாக்கம் மற்றும் டிரஸ்ட்புரம் கால்வாய்கள் கூவத்தில் இணையும் இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, டெங்கு ஒழிப்புப் பணிகளும் நடைபெறுகின்றன.
இவ்வருடம் ‘சூப்பர் எல் நினோ' ஆண்டாகக் கண்டறியப்பட்டுள்ளதால், பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை 3 டிகிரிக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் ஆசியப் பகுதிகளில் புயல்கள் மற்றும் கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை 12.5 % குறைவாகப் பெய்திருந்தாலும், வடகிழக்குப் பருவமழை அதை ஈடுசெய்யும் வகையில் அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி 24 மணி நேரத்திற்குள் தீவிர மழை அல்லது மேகவெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, 15 மண்டலங்களுக்கும் 15 (ஐ.ஏ.எஸ்) அலுவலர்களும், கண்காணிப்பிற்காக 7 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழைநீர் வடிகால் பணிகளைப் பொறுத்தவரை, கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதி யாரது ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. டிமெல்லோஸ் சாலையிலிருந்து பவுடர் மில் சாலை வழியாக காந்தி கால்வாயை அடையும் 500 மீட்டர் நீளத்திலான வெட்டி மூடும் வடிகால் (Cut and Cover Drain) பணி பருவமழைக்கு முன் நிறைவடையும். மாதவரம் ரெட்ஹில்ஸ் சாலையில் உபரி நீர் தேங்குவதைத் தடுக்க 1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு வெட்டி மூடும் வடிகால் அமைக்கப்பட்டு, மேல் தளம் அமைக்கும் பணி ஒரு வாரத்தில் முடிவடையும்.
உலக வங்கி நிதியுதவி மற்றும் மூலதனப் பணிகள் 99% முடிவடைந்து, தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன.
கோவளம் வடிநிலப் பகுதியில் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் மறுசீரமைப்புத் திட்டம் 2028 வரை செயல்படும் என்பதால், அக்டோபர் 1-க்குள் முடிக்கப்பட வேண்டிய முன்னுரிமைப் பணிகள் கண்டறியப்பட்டு நடைபெறுகின்றன. நிலத்தடி பயன்பாட்டுக் குழாய்கள் குறுக்கிடுவதால் சென்னை மெட்ரோ ரெயில், நீர்வள ஆதாரத் துறை, கழிவுநீர் அகற்று வாரியத்துடன் ஒருங்கிணைந்து பணிகள் நடைபெறுகின்றன.
நூக்கம்பாளையம் கால்வாய், சோழிங்கநல்லூர் சந்திப்பு வழியே தெற்கு பக்கிங்காம் கால்வாயை அடையும் திட்டங்கள், துரைப்பாக்கம் திட்டம் மற்றும் ஒக்கியம் மடுவு தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. ஒக்கியம் மடுவின் பாலம் கட்டும் பகுதியின் அகலம் 20 மீட்டரிலிருந்து 100 மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மதுரவாயல் - துறைமுகம் விரைவுச் சாலைப் பணிக்காகக் கூவத்தில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கரைகள் மற்றும் பாறைகளை அகற்றும் பணியைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் 109 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. செப்டம்பரில் நாளொன்றுக்கு 80 முதல் 100 ஆக இருந்த டெங்கு பாதிப்பு தற்போது 39 ஆகக் குறைந்துள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகளுக்காகவும் பொதுமக்கள் முகாம்களை அணுகுவதால் முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.
பாதிப்பு அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட 500 இடங்களில் தீவிரத் தூய்மைப் பணிகளும், கொசுப் புழுக்களை அழிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மிகக் கடுமையான மழை பெய்யும்போது வடிகால்களின் கொள்ளளவு வரம்பைக் கடந்து நீர் தேங்க வாய்ப்புள்ளதால், தாழ்வான 219 பகுதிகள் கண்டறியப்பட்டு நிவாரண முகாம்கள், 111 பொதுச் சமையலறைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களிடமிருந்தும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பெறப்படும் புகார்களுக்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் தீர்வு காணத் தனிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.