தமிழக செய்திகள்

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு

எலிகள் பெருகுவதைத் தடுக்கத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கச் சுற்று முதல் நாளிலேயே தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் தங்கும் விடுதிகளில் நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். எதிர்நோக்கும் பருவமழைக் காலத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க அரசு வளாகங்களில் சரியான சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், விடுதி வளாகங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாவது மற்றும் எலிகள் பெருகுவதைத் தடுக்கத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேங்கும் மழை நீரையும், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான டயர்கள், உடைந்த பாத்திரங்கள் போன்ற தேவையற்ற கழிவுகளை அகற்ற வேண்டும்.

ஊழியர்கள், மாணவர்கள் அல்லது விடுதி வாசிகளுக்குக் காய்ச்சல் அல்லது பிற நோய் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவச் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பலருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டால், உடனடியாகச் சுகாதார அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT