தமிழக செய்திகள்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த துணை ஆணையாளர்

அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், இ.ஆ.ப., இன்று (27.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட ஆற்காடு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமையல் கூடத்தில் ஆய்வு

பின்னர், வார்டு-144க்குட்பட்ட சன்னதி தெருவில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள அம்மா உணவகம், அடையாறு மண்டலம், வார்டு-175க்குட்பட்ட ஆதம்பாக்கம், ஏரிக்கரை சாலை மற்றும் வார்டு-172க்குட்பட்ட கிண்டி, மடுவங்கரையில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அவர்கள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை விரைந்து முடித்திடவும், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, குடிநீர் வசதிகள் மற்றும் சமையலறையினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சமைக்கும் இடத்தினைத் தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.