சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 15.10.2026 முதல் இன்று (04.11.2026) வரை 1,970 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 66,645 நபர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள மக்களின் நல வாழ்விற்கான சுகாதார நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் 200 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் 16 சமுதாய நல மருத்துவமனைகள் 3 மகப்பேறு மருத்துவமனைகள், தொற்று நோய் மருத்துவமனை என 360 மருத்துவமனைகள், 10 டயாலிசிஸ் மையங்கள் வாயிலாக பொது மக்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தவும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தவும் தினந்தோறும் சராசரியாக 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் குடிசைப் பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது.
இன்று (04.11.2026) 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 3,685 நபர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை தொடங்கிய கடந்த 15.10.2026 முதல் இன்று (04.11.2026) வரை 21 நாட்களில் 1,970 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 66,645 நபர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.