தமிழக செய்திகள்

வடகிழக்குப் பருவமழை.. சென்னையில் நீர்வழிக்கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்

நேற்று ஒருநாள் மட்டும் 258 மெட்ரிக் டன் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்வழிக்கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று (03.07.2026) ஒருநாள் மட்டும் 258 மெட்ரிக் டன் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளது.

தூர்வாரும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியால் 81 கி.மீ. நீளம் கொண்ட 44 நீர்வழிக்கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பருவமழைக்காலங்களில் இந்த நீர்வழிக்கால்வாய்களில் மழைநீர் சீராகச் செல்லும் வகையில் ஆம்பிபியன் வாட்டர் மாஸ்டர் (Amphibian Water Master), ஆம்பிபியஸ் எஸ்கவேட்டர் (Amphibious Excavator), மினி ஆம்பிபியன் (Mini Amphibian) ரொபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multipurpose Excavator) இயந்திரங்கள் மூலம் சுழற்சி முறையில் தூர்வாரும் பணி மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கழிவுகள் அகற்றம்

இதில் நேற்று (03.07.2026) ஒருநாள் மட்டும் வளசரவாக்கத்தில் உள்ள போரூர் ஏரியிலும், மாதவரம் மண்டலத்தில் உள்ள கொரட்டூர் ஏரியிலும், பெருங்குடி மண்டலத்தில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயிலும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயிலும், அடையாறு மண்டலத்தில் உள்ள வேளச்சேரி ஏரியிலும், ராயபுரம் மண்டலத்தில் உள்ள சுவம் ஆற்றிலும், அடையாறு மண்டலத்தில் உள்ள வீராங்கல் ஓடை கால்வாயிலும், வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள நொளம்பூர் கால்வாயிலும், அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள தாத்தன்குப்பம் கால்வாயிலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மாம்பலம் கால்வாயிலும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள வியாசர்பாடி கால்வாயிலும் மொத்தம் 258 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.