சென்னை,
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், அடையாறு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக. வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா. குமார், அடையாறு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர், அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட பெரியார் நகர், இரங்கராஜபுரம் பகுதியில் குப்பைகள் அகற்றுவது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, வார்டு-178க்குட்பட்ட வேளச்சேரி பிரதான சாலையில், மழைநீர் வடிகாலுக்கு அருகில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) மேற்கொண்டு வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெருங்குடி எம்.ஆர்.டி எஸ். சாலை, உதயா நகர் பகுதியில் உள்ள ஏரியில் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் உதய நகர், கல்லுக்குட்டை ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டதை பார்வையிட்டார். பின்னர், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, பவானி தெருவில் பொதுமக்கள் குப்பைகளை அகற்றுவது தொடர்பான கோரிக்கைகள் வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் குப்பைகளை அகற்றுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், வார்டு-177க்குட்பட்ட வேளச்சேரி எம்.ஆர்.டி எஸ். சாலையில் உள்ள பெருங்குடி 6 மதகுகள் கல்வெர்ட்டினையும், பெருங்குடி - வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலைய சாலையில் 6 மதகுகள் பாலத்திற்கு அருகிலுள்ள நீரேற்று நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, அமைச்சர், ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் வண்டல்களை தூர்வாரி அகற்றிடவும், சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றிடவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மண்டல அலுவலர் என்.தட்சணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.