சென்னை,
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, தண்டையார்பேட்டை மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (16.10.2026) வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, தண்டையார்பேட்டை மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு- 45க்குட்பட்ட ஏஏ சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, கணேசபுரம் சுரங்கப்பாதையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, வார்டு 46க்குட்பட்ட வியாசர்பாடி சந்திப்பில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளிலிருந்து மழைநீர் சீராக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள், வார்டு-37க்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளிலிருந்து மழைநீர் வெளியேற்றுதல், வியாசர்பாடி பகுதியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்புப் பணி, வார்டு-35க்குட்பட்ட வடக்கு அவென்யூ சாலை, கொடுங்கையூர் தெற்கு கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் இருந்து வண்டல்கள் அகற்றுவது, தூர்வாரும் பணிகளை தொடர்ந்து விரைந்து மேற்கொள்ளவும், மழையினை முன்னிட்டு அலுவலர்கள், பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி.சிவா, மண்டல அலுவலர் ஏ.ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.