சென்னை,
வடகிழக்கு பருவமலை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் சென்னை அடையாறு, பெருங்குடி, சோலிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தலைமை செயலாளர் சாய்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, ஏற்கனவே நடைபெற்று வரக்கூடிய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாய தாமரைகள் அகற்றும் பணியை அவர் ஆய்வு செய்தார்.
மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் சாய்குமார் அறிவுறுத்தினார்.
பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பை கிடங்கு வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்று வரக்கூடிய பணிகளை வந்து விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, குறிப்பாக செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சாய்குமார் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.